நெருப்புடன் விளையாட வேண்டாம் -ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


நெருப்புடன் விளையாட வேண்டாம் -ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 July 2019 5:53 AM GMT (Updated: 2 July 2019 5:39 PM GMT)

அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும், செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகரித்துள்ள நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என அந்நாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று ஈரான் கூறியிருந்தது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், அனுமதிக்கப்பட்டதை விட மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை அதிகாரிப்பதாக ஈரான் நேற்று அறிவித்தது.

ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு, 2015 ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி திட்டத்தை கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஈரான் வரம்பை மீறியதாக உறுதிப்படுத்தியது.

300 கிலோகிராம் என்ற அளவைத் தாண்டி, செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரித்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மேலும் மீறிச்செல்ல வேண்டாம் என பிரிட்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா கொடுத்த நெருக்கடியின் விளைவாகவே, ஒப்பந்தம் சிதையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, ஈரானின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் நெருப்புடன் விளையாடுவதாகவும், என்ன செய்கிறோம் என தெரிந்துதான் ஈரான் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்கா அதிபர்  டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அமெரிக்கா அதிபரிடம்  கருத்து கேட்டபோது, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாருடன் விளையாடுகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் யுரேனியத்தை வளப்படுத்த அனுமதிப்பது தவறு. ஒப்பந்தம் உயிர்ப்புடன் இருக்கும்போதே ஈரான் விதிமுறைகளை மீறியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஈரான் அணுஆயுதங்களை உருவாக்க, அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஒருபோதும் அனுமதிக்காது’’ என கூறப்பட்டுள்ளது.

Next Story