டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை


டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை
x
தினத்தந்தி 9 July 2019 10:18 AM GMT (Updated: 9 July 2019 10:18 AM GMT)

விலையுயர்ந்த மருந்துகளின் விலைகளை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் பட்டியலிட அறிவுறுத்தும், டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

வாஷிங்டன்

உயர் மருத்துவ சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் மருந்துகளின் விலை, அதிகமாக இருப்பதாக, அமெரிக்கர்கள் கருதி வருகின்றனர். இது அடுத்தாண்டு அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்க கூடும் எனத் தெரிகிறது. இதனால், மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் முறையான விலையை, பட்டியலிட்டு, மருந்து நிறுவனங்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விதி ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்தியது.

இதன்படி, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், ரத்தம் உறைதலை தடுக்க வல்ல ஜாரீல்டோ (Xarelto) உள்ளிட்ட மருந்துகளின் விலைப்பட்டியலை, தொலைக்காட்சி விளம்பரம் மூலம் வெளியிட முனைந்தனர். இதற்கு எதிராக, மூன்று மருந்து நிறுவனங்கள், கொலம்பியா உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கை, விசாரித்த நீதிபதி அமித் பி மேத்தா மருந்துகளின் விலைப்பட்டியலை, தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் வெளியிட வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடு, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறுவது போல் ஆகிவிடும் எனக் கூறி, நீதிபதி அமித் பி மேத்தா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story