உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் ருசிகரம் போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹண்ட் நேருக்கு நேர் விவாதம் + "||" + Tory leadership race: When will the Conservative Party vote for the new Prime Minister?

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் ருசிகரம் போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹண்ட் நேருக்கு நேர் விவாதம்

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் ருசிகரம் போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹண்ட் நேருக்கு நேர் விவாதம்
இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இறங்கியுள்ள போரிஸ் ஜான்சனுக்கும், ஜெரேமி ஹண்டுக்கும் இடையே டி.வி.யில் நேருக்கு நேர் விவாதம் நடந்தது.
லண்டன், 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்று இங்கிலாந்து அரசு முடிவு எடுத்தது. இதையொட்டி மக்களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பை அரசு நடத்தியது. அதில் பெரும்பான்மை மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற ஆதரவாக வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே 2016-ம் ஆண்டு, ஜூலை 13-ந் தேதி பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை முடுக்கி விட்டார்.

தெரசா மே ராஜினாமா

இது தொடர்பாக அவர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவரால் பெற முடியவில்லை.

இந்த முயற்சியில் தோல்வி அடைந்த அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதிய பிரதமர் யார்?

இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்டும் குதித்தனர்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 23-ந் தேதிக்குள் வாக்களித்து அந்த சீட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும்.

கருத்துக்கணிப்புகளில் போரிஸ் ஜான்சன் முன்னிலையில் உள்ளார்.

நேருக்கு நேர் விவாதம்

இந்த நிலையில் போரிஸ் ஜான்சனும், ஜெரேமி ஹண்டும் டி.வி. சேனல் ஒன்றின் ஏற்பாட்டில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர். இந்த விவாதத்தின் போது அனல் வீசியது. ஒருவரை ஒருவர் மடக்குவதில் கவனம் செலுத்தினர்.

ஒரு கட்டத்தில், “ அக்டோபர் 31-ந் தேதிக்குள், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடியாவிட்டால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?” என போரிஸ் ஜான்சனிடம் ஜெரேமி ஹண்ட் கேள்வி எழுப்பினார்.

‘வெளிப்படுத்தக்கூடாது’

அதற்கு போரிஸ் ஜான்சன் பதில் அளிக்கையில், “ அந்த தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியே வருவது தொடர்பாக எந்த ஒரு வாய்ப்பையும் வெளிப்படுத்தாமல் இருப்பது முக்கியம். அத்தகைய வாக்குறுதியை வழங்குவது என்பது ஐரோப்பிய கூட்டமைப்பு தாமதப்படுத்த ஊக்குவிப்பதாக அமையும்” என கூறினார்.

அதே நேரத்தில் ஜெரேமி ஹண்ட் குறிப்பிடுகையில், “ ஒரு கடுமையான பேச்சு வார்த்தையாளராக செயல்பட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை நான் முடித்துக்காட்டுவேன்” என கூறினார்.

அயர்லாந்து எல்லை பிரச்சினை

வடக்கு அயர்லாந்துக்கும், அயர்லாந்துக்கும் இடையேயான எதிர்கால எல்லை ஏற்பாடுகளில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தெரசா மே பெரிய தடுமாற்றத்துக்கு ஆளான நிலையில், தங்களால் தீர்வு காண முடியும் என இருவரும் நம்பிக்கை வெளியிட்டனர்.

இப்படி தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு மடக்கியது பார்வையாளர்களுக்கு ருசிகரமாக அமைந்தது.

மில்லியன் பவுண்ட் கேள்வி

இப்படி ருசிகர விவாதம் நடந்து முடிந்தாலும், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவி போட்டியில் வெற்றி பெற்று, பதவி ஏற்றால் தனது மந்திரிசபையில் ஜெரேமி ஹண்டுக்கு இடம் தருவாரா என்பது மில்லியன் பவுண்ட் கேள்வியாக எதிரொலிக்கிறது.