உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து ரெயில்கள் மோதல்; 16 பேர் பலி - இம்ரான்கான் இரங்கல் + "||" + Pakistan train crash: Death toll increases to 16 and more than 80 reported injured in Punjab

பாகிஸ்தானில் கோர விபத்து ரெயில்கள் மோதல்; 16 பேர் பலி - இம்ரான்கான் இரங்கல்

பாகிஸ்தானில் கோர விபத்து ரெயில்கள் மோதல்; 16 பேர் பலி  - இம்ரான்கான் இரங்கல்
பாகிஸ்தானில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி நேரிட்ட கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாகூர், 

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இருந்து குவெட்டா நகருக்கு அக்பர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பயணிகள் ரெயில் வழக்கம்போல பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரில் இருந்து குவெட்டா நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது.

வழியில் சாதிக்காபாத் தாலுகாவில் வால்ஹார் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுடன் பயங்கரமாக மோதியது. அப்போது பலத்த சத்தம் எழுந்தது. பயணிகள் மரண ஓலமிட்டனர்.

16 பேர் பலி

பயணிகள் ரெயில், பிரதான பாதையில் ஓடுவதற்கு பதிலாக தவறான பாதையில் வந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதிவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த கோர விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 79 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்தில் அக்பர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் முற்றிலும் நாசமாகி விட்டது.

மீட்பு பணி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகளும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கனரக எந்திரங்கள் கொண்டு ரெயில் பெட்டிகளை வெட்டி, பலியானவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள சாதிக்காபாத் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாதிக்காபாத் மற்றும் ரகீம் யார் கான் ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான பயணிகள் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இம்ரான்கான் இரங்கல்

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பல்லாண்டு காலமாக கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்துள்ள ரெயில்வே கட்டமைப்பை சீரமைக்கவும், பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யவும் ரெயில்வே மந்திரியை அறிவுறுத்தி உள்ளேன்” என கூறி உள்ளார்.

ரெயில்வே மந்திரி ஷேக் ரஷீத் அகமதுவும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

பணியாளர்களின் தவறால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் அவர் கூறி உள்ளார்.

பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சமும், படுகாயம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கு ரெயில்வே மந்திரி ரஷீத்தான் பொறுப்பேற்க வேண்டும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறி உள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் மரியம் நவாசும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.