ரபேல் போர் விமானம் ’அற்புதம்’ - இந்திய விமானப்படை வீரர்கள்


ரபேல் போர் விமானம் ’அற்புதம்’ - இந்திய விமானப்படை வீரர்கள்
x
தினத்தந்தி 13 July 2019 6:47 AM GMT (Updated: 13 July 2019 6:47 AM GMT)

ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கி பார்த்து அற்புதமாக இருந்தது என்று கூறியதாக பிரான்ஸ் விமானப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.

கருடா என்றழைக்கப்படும் இந்தியா - பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டில் உள்ள மாண்ட் டி மார்சன் நகரில், கடந்த 1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இருநாட்டு விமானப் படைகளுக்கும் சொந்தமான 27 போர் விமானங்கள் பங்கேற்றன.

இந்த பயிற்சி முகாமில்  300 வீரர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியின் போது பிரான்சின் ரபேல் போர் விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கினர். இந்த அனுபவத்தை, பிரான்ஸ் விமானப் படையின் தலைமை தளபதியிடம் அவர்கள் விவரித்துள்ளனர்.

ரபேல் போர் விமானத்தை இயக்கியது அற்புதமாக இருந்தது என்று இந்திய வீரர்கள் கூறியதாக பிரான்ஸ் விமானப்படை தலைமை தளபதி பிலிப் லாவின்  கூறியுள்ளார்.

இரண்டு, மூன்று முறை பறந்த பிறகு, மிகவும் சவுகரியமாக உணர்ந்ததாகவும், எளிதில் கையாளும் வகையில் இருந்ததாகவும் இந்திய வீரர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் படவுரியா, பிரெஞ்சு விமானப்படையின் மோன்ட் டி மார்சன் விமானத்தளத்தில் ரபேல் விமானத்தில் பறந்தார்.

அவர் தனது அனுபவம் குறித்து கூறும்போது,

இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ரபேல் எங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டவுடன் அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது அடிப்படையில் நல்ல அனுபவமாக இது இருந்தது. மேலும் சு -30 உடன் எவ்வாறு பயன்படுத்த முடியும், மற்றொரு சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான  போர் விமானமாக எங்கள் விமானப்படையில் இது இருக்கும் என்றார்.

Next Story