பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்து; 48 மணிநேர போராட்டத்திற்கு பின் 8 உடல்கள் மீட்பு


பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்து; 48 மணிநேர போராட்டத்திற்கு பின் 8 உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 16 July 2019 11:58 AM GMT (Updated: 16 July 2019 11:58 AM GMT)

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 48 மணிநேர போராட்டத்திற்கு பின் 8 உடல்கள் மீட்கப்பட்டன.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் நிலக்கரி வளம் அதிகமுள்ள பகுதியாகும்.  இதனால் அவற்றை எடுப்பதற்காக பல நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதில், குவெட்டா நகரருகே அமைந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஞாயிற்று கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், சுரங்கத்திற்குள் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.  இதனால், பணியில் இருந்த 11 தொழிலாளர்கள் பூமிக்கடியில் ஒரு கி.மீட்டர் தொலைவுக்கு சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  எனினும், சுரங்கத்திற்குள் விஷ வாயு பரவியது மீட்பு பணிக்கான முயற்சியில் தொய்வை ஏற்படுத்தியது.

நேற்று ஒருவர் மீட்கப்பட்டார்.  இன்று 2 பேர் மீட்கப்பட்டனர்.  அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  கடந்த 48 மணிநேர போராட்டத்திற்கு பின் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தான் மத்திய சுரங்க தொழிலாளர் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில், நாட்டில் ஒவ்வொரு வருடமும் நிலக்கரி சுரங்க விபத்துகளில் சராசரியாக 100 முதல் 200 தொழிலாளர்கள் பலியாகின்றனர்.  கடந்த வருடம் ஆகஸ்டில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது.  நீண்டநேரம் மேற்கொண்ட மீட்பு பணியின் முடிவில் தொழிலாளர்கள் உள்பட 15 பேரது உடல்கள் மீட்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.

Next Story