பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு


பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 July 2019 3:25 PM GMT (Updated: 16 July 2019 3:26 PM GMT)

பொழுதுபோக்கிற்காக சிங்கம் ஒன்றை வேட்டையாடி அதன் உடல் அருகே முத்தம் கொடுத்தபடி புகைப்படம் எடுத்த தம்பதிக்கு பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் மன்னராட்சி காலத்தில் பொழுதுபோக்கிற்காக அரசர்கள் காட்டுக்கு வேட்டையாட செல்வதுண்டு.  அவர்களுடன் அமைச்சர்கள், தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பாதுகாப்பிற்காக செல்வார்கள்.  காட்டில் வன விலங்குகளை வேட்டையாடி அவற்றை ஊருக்குள் கொண்டு வந்து முறைப்படி உறுப்புகளை பதப்படுத்தி வைத்திடுவார்கள்.  ஆனால் மன்னராட்சி முடிவுக்கு வந்தபின்னர் வேட்டைக்கு செல்வது வழக்கத்தில் இல்லை.

தென்னாப்பிரிக்க நாட்டில், விலங்குகளை பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுவதற்கு என்றே அதற்கான ஏற்பாடுகளை செய்து தர பல நிறுவனங்கள் உள்ளன.

அங்கு செல்லும் இங்கிலாந்து நாட்டு சுற்றுலாவாசிகள் வேட்டையாட தேவையான துப்பாக்கிகளுக்கான உரிமம் பெற்று தருவது மற்றும் ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட வசதிகளை இந்நிறுவனங்கள் செய்து தருகின்றன.  சிறிய ரக குரங்குகளில் இருந்து சிங்கங்கள், நீர்யானைகள் போன்ற பெரிய ரக விலங்குகள் வரை வேட்டையாடப்படுகின்றன.

பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரம் சிங்கங்கள் கொல்லப்படுகின்றன.  கடந்த 10 வருடங்களில் 2 ஆயிரத்து 500 விலங்கு உறுப்புகள் இங்கிலாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கனடா நாட்டு தம்பதி ஒன்று தென்னாப்பிரிக்க காடுகளில் பெரிய சிங்கம் ஒன்றை வேட்டையாடி மகிழ்ந்து உள்ளனர்.  இதன்பின் அவர்கள், உயிரிழந்து கிடந்த சிங்கத்தின் அருகே அமர்ந்தபடி முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.  சூரியனின் உஷ்ணத்தில் கடின உழைப்பு.  ஒரு மிக பெரிய சிங்கம்... என சமூக ஊடகங்களில் படத்துடன் பதிவு வெளியாகி உள்ளது.  இதற்கு திரை பிரபலங்கள், விலங்கு நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Next Story