இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கோவில்கள் இடிந்து சேதம்


இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கோவில்கள் இடிந்து சேதம்
x
தினத்தந்தி 16 July 2019 11:05 PM GMT (Updated: 16 July 2019 11:05 PM GMT)

இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கோவில்கள் இடிந்து சேதமடைந்தன.

ஜகார்த்தா,

புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் பாலி, கிழக்கு ஜாவா, லோம்புக் ஆகிய தீவு பகுதிகளில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளான பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 91 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக பாலியில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

முன்னதாக, இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கு தீவில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும், இதில் 2 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Next Story