சர்வதேச கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான் கான்


சர்வதேச கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான் கான்
x
தினத்தந்தி 18 July 2019 4:18 AM GMT (Updated: 18 July 2019 4:18 AM GMT)

குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய மறுத்த சர்வதேச கோர்ட் தீர்ப்பை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்,

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

குல்பூஷன் ஜாதவ் வழக்கின் முழு விவரம்:

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49). இவர் இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரி என்றும், தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்தார் என்றும் பாகிஸ்தான் அபாண்டமாக பழி சுமத்தி, 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் 3-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு 22 நாட்கள் கழித்து தெரிவித்தது.

ஆனால் குல்பூஷண் ஜாதவ், இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி, ஈரானில் வர்த்தகம் செய்து வந்தார்; அவரை பாகிஸ்தான் ஏஜெண்டுகள் கடத்தி வந்து இந்த பழியை அபாண்டமாக சுமத்துகின்றனர் என இந்தியா கூறியது.

இருப்பினும் குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கை பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு அவசர கோலத்தில் விசாரித்து, அவருக்கு மரண தண்டனை விதித்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பால் அதிர்ந்து போன இந்தியா, அதே ஆண்டின் மே மாதம் 8-ந்தேதி, நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டை நாடியது. ஜாதவை தூதரக ரீதியில் சந்திக்க அனுமதிக்காமல், 1963-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தூதரக உறவு தொடர்பான வியன்னா உடன்படிக்கை விதிகளை பாகிஸ்தான் மீறுகிறது என இந்தியா குற்றம்சாட்டியது.

இந்தியாவின் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். அதைத் தொடர்ந்து குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை அமல்படுத்த தடை விதித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து வழக்கின் விசாரணை நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த தீர்ப்பு 17-ந்தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து நேற்று அதிரடி தீர்ப்பு அளித்தனர். மேலும், அவர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை சர்வதேச கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துல் காவி அகமது யூசுப் வாசித்தார்.

16 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 15 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஒரு மனதாக அளித்தனர். ஒரு நீதிபதி மட்டுமே எதிரான நிலையை எடுத்துள்ளார். எனவே பெரும்பான்மை தீர்ப்பு நடைமுறைக்கு வரும். குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக நீதியிலான தொடர்புக்கு கூட வாய்ப்பு தராமல் பாகிஸ்தான் வியன்னா உடன்படிக்கையின் பிரிவு 36(1)-ஐ மீறி உள்ளதாக சர்வதேச கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.சர்வதேச கோர்ட்டின் இந்த தீர்ப்பு பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை இந்தியா வரவேற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் தீர்ப்பை வரவேற்றுள்ளது. அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச கோர்ட்டு நீதி என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் கற்பிக்கிற வகையில் நீதி வழங்கி உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச கோர்ட்டு தீர்ப்பை, குல்பூஷண் ஜாதவின் சொந்த ஊரான மராட்டிய மாநிலம், சதாரா மாவட்டம், ஜாவ்லி கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரை பாகிஸ்தான் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்து கொண்டு வருவதற்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Next Story