ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது


ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது
x
தினத்தந்தி 18 July 2019 4:03 PM GMT (Updated: 18 July 2019 4:03 PM GMT)

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நவாஸ் செரீப் பிரதமராக இருந்த போது பனாமா ஆவண கசிவு காரணமாக பதவியை இழந்தார். இதனையடுத்து பிரதமரானவர்  சாகித் ககான் அப்பாசி. பின்னர் தேர்தல் நடைபெற்று இம்ரான் கான் பிரதமர் ஆனார். அப்பாசி பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு நவாஸ் செரீப் அமைச்சரவையில் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தார். அப்போது, கத்தார் நாட்டில் இருந்து திரவ எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அப்பாசி மறுத்து வந்தார்.

இந்த நிலையில் அப்பாசி லாகூரில் பத்திரிகையாளர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தேசிய பொறுப்புடைமை முகமை (ஊழல் தடுப்பு) அதிகாரிகள் வழிமறித்து கைது செய்தனர். இதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரையும் இம்ரான்கான் அரசு சிறையில் போட விரும்புவதாக அவர் குற்றம்சாட்டினார். 

Next Story