பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம்: ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா - ஈரான் மறுப்பு


பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம்: ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா - ஈரான் மறுப்பு
x
தினத்தந்தி 19 July 2019 11:30 PM GMT (Updated: 19 July 2019 8:55 PM GMT)

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

வாஷிங்டன்,

அணுஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கடந்த மாதம் ஈரானின் வான்பரப்புக்குள் நுழைந்து உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் புரட்சிகர படை சுட்டு வீழ்த்தியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அந்த உத்தரவை திரும்ப பெற்றார்.

ஆனாலும் ஈரானுக்கு பாடம் புகட்டும் விதமாக வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத வகையில் கடுமையான பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்தது.

இந்த நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் ஹோர்முஜ் ஜலசந்தியில் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் பாக்ஸர்’ போர்க்கப்பல் நுழைந்தபோது அந்த கப்பலை அச்சுறுத்தும் வகையில் நெருங்கி வந்த ஈரானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:-

ஹோர்முஜ் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் அதில் இருந்த படை வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஈரானின் ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

சுமார் ஆயிரம் மீட்டர் தொலைவுக்கு நெருங்கி வந்த ஆளில்லா விமானத்தை அமெரிக்க வீரர்கள் துல்லியமாக தாக்கி முற்றிலுமாக அழித்தனர். சர்வதேச கடற் பரப்பில் செல்லும் கப்பல் களுக்கு ஈரானின் செயல்பாடுகள் அச்சுறுத்தலாகவும், ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

ஆனால் இதை ஈரான் மறுத்துள்ளது. தங்கள் நாட்டின் ஆளில்லா விமானம் ஏதும் சுட்டுவீழ்த்தப்படவில்லை என அந்தநாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு துணை மந்திரி அப்பாஸ் அராக்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா தவறுதலாக தங்களது ஆளில்லா விமானத்தையே சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எங்களது ஆளில்லா விமானங்கள் அனைத்தும் மீண்டும் திரும்பி வந்துவிட்டன. ஈரானின் எந்த ஒரு ஆளில்லா விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story