இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - டொனால்டு டிரம்ப்


இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - டொனால்டு  டிரம்ப்
x
தினத்தந்தி 22 July 2019 7:49 PM GMT (Updated: 22 July 2019 7:49 PM GMT)

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் வலியுறுத்தினார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படத் தயார் என்று இம்ரான் கானிடம் தெரிவித்தார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில், “என்னால் உதவ முடியும் என்றால், நான் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறேன்” என்றார். மேலும் பிரதமர் மோடியும் என்னிடம் காஷ்மீர் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படுத்த உதவும்படி கேட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்யுமாறு டிரம்பை பிரதமர் மோடி கேட்டதாக கூறியதை இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.  இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டரில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது, சமரச தூதுவராக செயல்பட விரும்புவதாகவும், இரு நாடுகளும் கோரிக்கை வைத்தால் அவ்வாறு செயல்பட தயார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்படி எந்த ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடியால் முன்வைக்கப்படவில்லை. இரு நாடுகளிடையேயான பிரச்சனைகள் உள்நாட்டு விவகாரத்துறை மூலமாக தீர்க்கப்படும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் இறுதி ஒப்பந்தம் இதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story