உலகின் தலைப்பு செய்தி: சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து


உலகின் தலைப்பு செய்தி: சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து
x
தினத்தந்தி 23 July 2019 10:12 AM GMT (Updated: 23 July 2019 10:12 AM GMT)

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில்  சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்கு  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாசா, நிலவை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்திய  இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் தென்துருவத்தைப் பற்றி இஸ்ரோ நடத்தும் ஆய்வுகளை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறோம். நிலவின் தென் பகுதிக்கு விண்வெளி வீரர்களை விரைவில் அனுப்ப தாங்கள் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளது.

உலகம் முழுவதும் (சந்திராயன்-2) இதுவே நேற்றைய தலைப்பு செய்தியாக இருந்தது. ”இந்தியா சந்திரனுக்கு செல்லும் வழியில் உள்ளது” என அமெரிக்க முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.


Next Story