ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் -டொனால்டு டிரம்ப் நம்பிக்கை


ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் -டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
x
தினத்தந்தி 23 July 2019 10:22 AM GMT (Updated: 23 July 2019 10:22 AM GMT)

ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்து வரும்  தலிபான்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு  நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியதாவது:-

ராணுவ வீரர்களைப் போல் அல்லாமல், காவல்துறையினரைப் போன்று அங்கு அமெரிக்க படைகள் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு இல்லாமல், ராணுவ வீரர்களைப் போல் போரிட்டால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். அதனால் சுமார் ஒரு கோடி மக்கள் பலியாகி விடுவார்கள் என்பதால் தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  தலிபான் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே கடந்த சில வாரங்களாக கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க, பாகிஸ்தான் உதவும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் நடவடிக்கையைப் பொறுத்து, நிறுத்தப்பட்ட பாதுகாப்பு நிதி உதவி திரும்ப வழங்கப்படும் என கூறினார்.

இம்ரான்கான் கூறும்போது, ஆப்கன் அமைதி ஒப்பந்தம் நிறைவேறும்  தருவாயில் இருக்கிறது. வரும் நாட்களில் ஆப்கானிஸ்தான் அரசுடன்  பேச்சுவார்த்தை நடத்த தலிபான்களிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.

கூட்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதிபர் டிரம்ப் புத்துணர்ச்சியுடன் இருப்பதைக் கண்டேன். அவர் நேர்மையான மனிதர், அவரிடம் வேஷம் இல்லை,  வார்த்தைகளில் ஏமாற்று வித்தை இல்லாத ஒருவர். நான் மட்டுமல்ல, எனது முழு தூதுக்குழுவும் இந்த கூட்டத்தை நேசித்தது என்று கூறினார்.

Next Story