சர்ச்சை எழுந்ததால் பல்டி அடித்தது, அமெரிக்கா ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு விவகாரம்’’ என கருத்து


சர்ச்சை எழுந்ததால் பல்டி அடித்தது, அமெரிக்கா ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு விவகாரம்’’ என கருத்து
x
தினத்தந்தி 24 July 2019 12:15 AM GMT (Updated: 23 July 2019 8:23 PM GMT)

டிரம்ப் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா பல்டி அடித்தது. ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை’’ என கூறி உள்ளது.

வாஷிங்டன், 

‘‘பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார்’’ என வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார்.

இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றார்.

இது குறித்து அவர் பாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஒருபோதும் வராது. காஷ்மீர் பிரச்சினையில் ஒரே ஒருமுறை, பர்வேஸ் மு‌ஷரப் அதிபராகவும், இந்திய பிரதமராக வாஜ்பாயும் இருந்தபோது தீர்வை நெருங்கினோம். ஆனால் அதன் பின்னர் எதிர் எதிர் துருவங்கள் ஆகிவிட்டோம். இந்தியா பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். இதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பு செய்ய முடியும்’’ என குறிப்பிட்டார்.

ஆனால் டிரம்பின் கருத்து, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்பதால் பெரும் சர்ச்சை உருவானது. இந்திய நாடாளுமன்றத்தில் இது பெரும் புயலைக் கிளப்பியது.

அதைத்தொடர்ந்து அமெரிக்கா பல்டியடித்தது. அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளரிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியபோது, இது அம்பலத்துக்கு வந்தது.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘காஷ்மீர் பிரச்சினை, இரு தரப்பு பிரச்சினை. இந்த நிலையில், பாகிஸ்தானும், இந்தியாவும் உட்கார்ந்து பேசுவதை டிரம்ப் நிர்வாகம் வரவேற்கிறது. அமெரிக்கா உதவ தயாராக உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

டிரம்பின் கருத்துக்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஹர்ஷ் ‌ஷரிங்லாவிடம், ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. பிராட் ஷெர்மான் மன்னிப்பு கேட்டார்.

இதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், ‘‘டிரம்பின் சிறுபிள்ளைத்தனமான, தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்காக இப்போதுதான் இந்திய தூதர் ஹர்ஷ் ‌ஷரிங்லாவிடம் மன்னிப்பு கேட்டேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.


Next Story