பிரமாண்ட எல்லைச்சுவர் கட்டுவதற்கு ராணுவ நிதியை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி : டிரம்ப் மகிழ்ச்சி


பிரமாண்ட எல்லைச்சுவர் கட்டுவதற்கு ராணுவ நிதியை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி : டிரம்ப் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 July 2019 11:45 PM GMT (Updated: 27 July 2019 8:33 PM GMT)

அமெரிக்காவில் பிற நாட்டினர் அத்துமீறி நுழைவதை தடுக்கிற விதத்தில் பிரமாண்ட எல்லைச்சுவர் கட்டுவதற்கு ராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இது மிகப்பெரிய வெற்றி என டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்குத்தான் என்பது அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பின் உறுதியான நம்பிக்கை. பிற நாட்டினர் அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைவதையும், தங்குவதையும் அவர் தீவிரமாக எதிர்க்கிறார்.

மெக்சிகோவையொட்டிய எல்லை வழியாக ஏராளமானோர் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுப்பதற்கு பிரமாண்ட எல்லைச்சுவர் கட்ட வேண்டும் என்பது டிரம்பின் கனவுத்திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றிக்காட்டுவேன் என அவர் ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு அவர் மெக்சிகோவின் நிதி உதவியை நாடியபோது, அந்த நாடு தர முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது.

இதையடுத்து சொந்த நாட்டின் நிதியைப் பயன்படுத்தி, எல்லைச்சுவரை எழுப்ப வேண்டும் என்று டிரம்ப் முடிவு செய்தார். ஆனால் அதற்கு மிகப்பெரிய தடைச்சுவராக அமைந்தனர், எதிர்க்கட்சியினரான ஜனநாயக கட்சியினர்.

டிரம்பின் கனவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாட்டின் பணத்தை எடுத்துக்கொள்ள ஒருபோதும் அனுமதி அளிக்கவே முடியாது என அவர்கள் அடம் பிடித்தனர்.

இந்த நிலையில் எல்லைச்சுவரின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்கு ராணுவ நிதியைப் பயன்படுத்த டிரம்ப் எண்ணினார். இதற்காக அவர் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். ஆனால் இதற்கு எதிராக 20 மாகாணங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

கலிபோர்னியா கோர்ட்டு, எல்லைச்சுவர் கட்டுவதற்கு ராணுவ நிதியை பயன்படுத்த தடை விதித்தது. இதை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எல்லைச்சுவரின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்கு 2.5 பில்லியன் டாலர் ராணுவ நிதி (சுமார் ரூ.17 ஆயிரத்து 500 கோடி) பயன்படுத்துதற்கு அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை 5 நீதிபதிகள் வழங்கினர். இதற்கு எதிராக 4 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மெஜாரிட்டி தீர்ப்பு அமலுக்கு வரும்.

இந்த நிதியைக் கொண்டு, கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ மாகாணங்களில் தெற்கு எல்லைச்சுவர் கட்டப்படும்.

இந்த தீர்ப்பு மிகப்பெரிய வெற்றி என ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘வாவ்... எல்லைச்சுவர் பிரச்சினையில் மிகப்பெரிய வெற்றி. கீழ்க்கோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி விட்டது. தெற்கு எல்லைச்சுவர் கட்ட அனுமதி அளித்துள்ளது. எல்லை பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது’’ என கூறி உள்ளார்.


Next Story