நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 65 பேர் பலி


நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 65 பேர் பலி
x
தினத்தந்தி 29 July 2019 10:38 PM GMT (Updated: 29 July 2019 10:38 PM GMT)

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் பலியாகினர்.

அபுஜா,

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாகாணத்தின் தலைநகர் மயிடுகுரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் உள்ளூர் கிராமவாசிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த, போகோஹரம் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். கிராமவாசிகள் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது காட்டுக்குள் சென்று மறைந்து கொண்ட பயங்கரவாதிகள் தங்களை விரட்டி வந்த கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 42 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வாரம் இதே கிராமத்துக்குள் புகுந்த போகோஹரம் பயங்கரவாதிகள் 11 பேரை கிராம மக்கள் அடித்து கொன்றதாக தெரிகிறது. அதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் போகோஹரம் பயங்கரவாத தலைவர் தெரிவித்துள்ளார்.


Next Story