4 பேர் பயணம் செய்யலாம்: ஜப்பானில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றி


4 பேர் பயணம் செய்யலாம்: ஜப்பானில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றி
x
தினத்தந்தி 6 Aug 2019 11:15 PM GMT (Updated: 6 Aug 2019 8:42 PM GMT)

ஜப்பானில் 4 பேர் பயணம் செய்ய கூடிய பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது.

டோக்கியோ,

ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023-ம் ஆண்டுக்குள் சரக்குகளை ஏற்றி செல்லும் பறக்கும் கார்களையும், 2030-க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளது.

அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம் 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்துள்ளது. பெரிய அளவிலான ஆளில்லா விமானத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த பறக்கும் கார் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் சோதித்து பார்க்கப்பட்டது.

தரையில் இருந்து செங்குத்தாக மேல் நோக்கி எழுந்த பறக்கும் கார், 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்துக்கும் மேலாக பறந்து, பின்னர் தரையிறங்கியது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கூறிய என்.இ.சி. நிறுவனம் முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்து 2026-ம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.


Next Story