சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி


சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி
x
தினத்தந்தி 6 Aug 2019 11:45 PM GMT (Updated: 6 Aug 2019 9:41 PM GMT)

சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறையும், 15 பிரம்படியும் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூர்,

தமிழ்நாட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 25). இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். அங்கு இவருக்கு சம்பளமாக மாதம் 600 சிங்கப்பூர் டாலர் வழங்கி உள்ளனர். முருகேசன் சம்பள பணத்தை தன்னுடைய பெற்றோருக்கு அனுப்பி வந்தார்.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர்களிடம் இருந்த பணத்தை பறித்து உள்ளார். இதனால் போலீசார் முருகேசனை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசார் மீது எச்சிலை துப்பியும், 2 போலீசாரின் கைகளை கடித்தும், தாக்கியும் தகராறு செய்து உள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிறகும் அவர் திருந்துவதாக தெரியவில்லை. ஒரு நாள் மது குடித்துவிட்டு பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி, பெஞ்சுகளை சேதப்படுத்தினார். இதுபோன்று 6 குற்ற வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதுதொடர்பான விசாரணை சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது முருகேசன், “இனி தவறுகளில் ஈடுபடமாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு தண்டனையை குறைத்து கொடுங்கள்” என்று கெஞ்சினார். அதன்பேரில் நீதிபதி தண்டனையை சற்று குறைத்து, முருகேசனுக்கு 3½ ஆண்டு சிறை தண்டனையும், 15 பிரம்படியும் வழங்க உத்தரவிட்டார்.


Next Story