மியான்மரில் டெங்கு காய்ச்சலுக்கு 48 பேர் பலி; 10,757 பேர் பாதிப்பு


மியான்மரில் டெங்கு காய்ச்சலுக்கு 48 பேர் பலி; 10,757 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:23 AM GMT (Updated: 14 Aug 2019 10:23 AM GMT)

மியான்மர் நாட்டில் கடந்த 7 மாதங்களில் டெங்கு ரத்தகசிவு காய்ச்சலுக்கு 48 பேர் பலியாகி உள்ளனர்.

யாங்கன்,

மியான்மர் நாட்டில் சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது சுகாதார துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, அந்நாட்டில் கடந்த 7 மாதங்களில் டெங்கு ரத்தகசிவு காய்ச்சலுக்கு 48 பேர் பலியாகி உள்ளனர்.  10,757 பேர் பாதிப்படைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இவற்றில் கடந்த ஜூலை 27ந்தேதி வரை அதிகளவாக, ஆயியர்வாடி பகுதியில் 1,974 பேர் பாதிக்கப்பட்டும், 5 பேர் பலியாகியும் உள்ளனர்.  இதனை தொடர்ந்து யாங்கன் பகுதியில் 1,788 பேர் பாதிக்கப்பட்டும், 15 பேர் பலியாகியும் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் 5 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகள் 4,473 என்ற எண்ணிக்கையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 3,649 பேரில் 187 பேர் பலியாகினர்.  இவர்களில் யாங்கன் பகுதியில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு என்பது கொசுவால் பரவும் வைரஸ் நோய்.  இது கடுமையான காய்ச்சலை உண்டுபண்ணும்.  அந்நாட்டில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

சுகாதார குறைவு, சுகாதாரமற்ற நீர் இருப்பு ஆகியவை டெங்கு பரவ முக்கிய காரணிகளாக உள்ளன.  இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Next Story