உலக செய்திகள்

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை + "||" + 3 Ministers in Malaysian cabinet demand Zakir Naik's expulsion from country

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை
மலேசிய அமைச்சரவையில் உள்ள 3 அமைச்சர்கள் ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்கு  மத போதகர் ஜாகீர் நாயக் மலேசியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்த இண்டர்போல், எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர் நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 2017-ல் நிராகரித்து விட்டது.

ஜாகீர் நாயக் வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்க வேண்டியது உள்ளது என இந்திய அரசு, 2018-ல் அவரை நாடு கடத்த மலேசிய அரசுக்கு முறையான கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும் சாதகமான பதில் வரவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார் ஜாகீர் நாயக்.

இந்த நிலையில் மலேசிய அமைச்சரவை இன்று கூடி  இந்திய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கிற்கு நிரந்தர  குடியுரிமை வழங்குவது குறித்து  விவாதித்தது. இந்த கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள்  பல இன தேசத்தில் இனரீதியான உணர்ச்சிகரமான கருத்துக்களை கூறியதற்காக அவரை வெளியேற்ற வேண்டும் என கூறி உள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு "100 மடங்கு அதிக உரிமைகள்" இருப்பதாக அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது.

மலேசியாவில் இனம் மற்றும் மதம் முக்கியமான பிரச்சினைகளாக உள்ளது, அங்கு வாழும் 32 மில்லியன் மக்களில் முஸ்லிம்கள் 60 சதவீதம்  உள்ளனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் சீன மற்றும் இந்திய இனத்தவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவார்கள்.

ஜாகீர் நாயக்கின் கருத்துக்கள் மலேசியாவில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கலாம் என்று மலேசிய அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டை ஜாகீர் நாயக் மறுத்துள்ளார்.

நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம், அதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஜாகீர் நாயக்கை இனி மலேசியாவில் தங்க அனுமதிக்கக்கூடாது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்து உள்ளார்.

எங்கள் கவலைகளை பிரதமர் கவனத்தில் எடுத்துள்ளார். இது குறித்து  பரிசீலிப்பதற்கும் சிக்கலைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும்  என்பதை விரைவில் முடிவு செய்வதற்கும் நாங்கள் அதை அவரிடம் விட்டு விடுகிறோம்   என மலேசிய மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் மற்றும் நீர் நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி உள்ளனர். மேலும் இது குறித்து பிரதமர் மகாதீர் முகமதுவிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இது குறித்து ஜாகீர் நாயக் வெளியிட்டு உள்ள  அறிக்கையில், இந்து சிறுபான்மையினரை இஸ்லாமியர்கள் நியாயமான முறையில் நடத்தியதற்காக மலேசிய அரசாங்கத்தை நான் பாராட்டியிருப்பது அரசியல் ஆதாயங்களுக்கு  ஏற்பவும், வகுப்புவாத பிளவுகளை உருவாக்குவதற்கும் மற்றும் தவறாகவும்  சித்தரிக்கப்பட்டு உள்ளது என கூறி உள்ளார்.

மலேசிய அரசு செய்தி நிறுவனமான பெர்னாமா, ஜாகீர் நாயக்கின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது. "வேறு எந்த நாடும் அவரைப் பெற விரும்பினால், அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்" என்று பிரதமர் மகாதீர் கூறியதாக கூறி உள்ளது.