இந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகளுக்கு ராணுவ விருது


இந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகளுக்கு ராணுவ விருது
x
தினத்தந்தி 15 Aug 2019 9:38 AM GMT (Updated: 15 Aug 2019 9:38 AM GMT)

இந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகள் அந்நாட்டின் உயரிய ராணுவ விருதுகளை பெறுகின்றனர்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தான்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் அமைந்த பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் சென்று தாக்குதல் நடத்தின.  இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பின் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் வந்தன.

அவற்றை இந்திய விமான படையை சேர்ந்த விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்தன.  இதில் இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  அதில் இருந்த விமானி அபிநந்தன் அங்கு சிறை பிடிக்கப்பட்டார்.  இதன்பின் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அபிநந்தன் இந்தியாவிடம் கடந்த மார்ச் 1ந்தேதி ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் முக்கிய செயலாற்றிய பாகிஸ்தான் விமானி முகமது நவுமன் அலி, அந்நாட்டின் உயரிய சிதார்-இ-ஜூரத் என்ற ராணுவ விருதினை பெறுகிறார்.  இதேபோன்று அவருடன் பணியாற்றிய ஹசன் மஹ்மூத் சித்திக், அந்நாட்டின் தம்கா-இ-சுஜாத் என்ற மற்றொரு உயரிய ராணுவ விருதினை பெறுகிறார்.  இதனை அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது அடுத்த வருடம் மார்ச் 23ந்தேதி, பாகிஸ்தான் தின பேரணி நடந்து முடிந்தபின்பு நடைபெறும் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Next Story