பாகிஸ்தான் கோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை


பாகிஸ்தான் கோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 16 Aug 2019 1:32 AM GMT (Updated: 16 Aug 2019 1:32 AM GMT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சீனா ஆதரித்துள்ளது.

நியூயார்க், 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று ஆதரவு கோரினார். தங்களது நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும், காஷ்மீரில் நடந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று கவுன்சிலின் தலைவர் ஜோயன்னா ரானெக்காவுக்கு குரேஷி கடிதம் எழுதினார். இதற்கிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை அதன் நட்பு நாடான சீனா ஆதரித்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கைப்படி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு அதன் தலைவரை சீனா கேட்டுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடப்பதாக கவுன்சிலின் தலைவர் ஜோயன்னா ரானெக்கா தெரிவித்தார்.


Next Story