காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.வில் ரகசிய ஆலோசனை


காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.வில் ரகசிய ஆலோசனை
x
தினத்தந்தி 16 Aug 2019 2:50 PM GMT (Updated: 16 Aug 2019 2:50 PM GMT)

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ரகசிய ஆலோசனை நடைபெற உள்ளது.

ஜெனீவா,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே செயல்பட்டு வந்த சம்ஜோதா, தார் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை நிறுத்திக் கொண்டது.

காஷ்மீர் விவகாரத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது  இந்தியாவின் உள்விவகாரம் சம்பந்தப்பட்டது என இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பிற நாடுகள் முன்வரவில்லை. இஸ்லாமிய நாடுகள் கூட காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாதது வருத்தமளிப்பதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொண்டு சென்றார். இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

ஐ.நா. பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் இதில் பங்கேற்க உள்ளன. மேலும் இது ரகசிய ஆலோசனையாக நடத்தப்படும் என்றும் இந்த சபையின் எந்த அறிகைக்களும் பதிவு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story