ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் - சையது அக்பருதீன் கருத்து


ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் - சையது அக்பருதீன் கருத்து
x
தினத்தந்தி 16 Aug 2019 5:30 PM GMT (Updated: 16 Aug 2019 5:30 PM GMT)

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டது, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இப்போதும் அதே நிலை நீடிப்பதாகவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் கூறுகையில், “இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டம் இயற்றும் அமைப்புகளால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்” என்று தெரிவித்தார்.

மேலும் ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாகக் குறைப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், அங்கு நிலைமை அமைதியாக இருப்பதை இந்தியா உறுதிப்படுத்தும் என்றும் சையது அக்பருதீன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமையை நீக்கிய இந்தியாவின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் எழுதிய புகார் பற்றி மூடிய கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்தது. பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சீனா ஆதரவு அளித்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜோன்னா ரொனெக்கா தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான்-சீனாவின் முயற்சி தோல்வியடைந்தது.  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story