இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்


இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Aug 2019 4:03 AM GMT (Updated: 17 Aug 2019 4:03 AM GMT)

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்டு உள்ளார்.

அந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நேற்று அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது, ‘காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் கவலையை வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்’ என்றும் கூறினார்.

இந்த உரையாடலின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்,  ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகையின் ஊடக  துணை செயலர் ஹோகன் கிட்லி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெறும் முன் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், ஐநா கூட்டம் முடிந்த பிறகே, இந்த தகவல் வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டது.

Next Story