யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம் -வடகொரிய அதிபர் பெருமிதம்


யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம் -வடகொரிய அதிபர் பெருமிதம்
x
தினத்தந்தி 17 Aug 2019 5:51 AM GMT (Updated: 17 Aug 2019 5:51 AM GMT)

யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாக, ராணுவத்தை வடகொரிய அதிபர் புகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவும், தென் கொரியாவும் ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதை, தங்கள் நாட்டிற்கு எதிரான படையெடுப்புக்கான ஒத்திகை என்று வடகொரியா கருதுகிறது. ஒவ்வொரு முறை அந்த நாடுகள் பயிற்சியில் ஈடுபடும் போதும் வடகொரியா தனது ஆயுத பலத்தை பயன்படுத்தி எச்சரிக்கை செய்வது வழக்கம்.

இந்த நிலையில், கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவும், தென் கொரியாவும் கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது வடகொரியாவை ஆத்திரமூட்டியுள்ளது. கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, 5 முறை ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா.

நேற்று புதிய ரக ஆயுதம் ஒன்றை, அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. கூறியுள்ளது.

ராணுவத்தின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதென வடகொரிய அதிபர் பாராட்டியதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டு ராணுவம் ரகசியமாகவும், அற்புதமாகவும் ஆயுதச் சோதனை நடத்துவதாக கிம் ஜாங் உன் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாகவும் ராணுவத்தை அவர் புகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடு சோதனை செய்து பார்த்துள்ள புதிய ரக ஆயுதம் என்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. 

Next Story