அமெரிக்க நாட்டில் சுங்கத்துறை கம்ப்யூட்டர்கள் திடீர் செயலிழப்பு


அமெரிக்க நாட்டில் சுங்கத்துறை கம்ப்யூட்டர்கள் திடீர் செயலிழப்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 12:00 AM GMT (Updated: 17 Aug 2019 9:24 PM GMT)

அமெரிக்க நாட்டில் சுங்கத்துறை கம்ப்யூட்டர்கள் திடீரென செயலிழந்து போயின. இதனால் விமான நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதி அடைந்தனர்.

வாஷிங்டன், 

அமெரிக்க நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் இயங்குவதில் கம்ப்யூட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அங்கெல்லாம் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளின் பணி, கம்ப்யூட்டர்களை மையப்படுத்தியே அமைந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளின் கம்ப்யூட்டர்கள் திடீரென செயலிழந்து போயின.

அமெரிக்காவில் கோடை காலம் என்பதால் வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் என பல்வேறு விமான நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.

கம்ப்யூட்டர்களில் கோளாறு ஏற்பட்டதின் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இந்த விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பயணிகளையும், அவர்களது ஆவணங்களையும் விரைவாக சோதித்து அனுப்ப முடியாமல் போனது.

இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதி அடைந்தனர்.

வாஷிங்டன் பெருநகர விமான நிலைய ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மிகா லில்லார்டு இது பற்றி கூறுகையில், “வாஷிங்டன் டல்லாஸ் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து மாலை 3.18 மணியில் இருந்து வந்து பயணிகள் குவிந்துள்ளனர். அவர்களுக்கான நடைமுறைகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து முடித்து அனுப்ப முடியவில்லை” என கூறினார்.

மேலும், “சர்வதேச வருகை முனையத்தில் ஏராளமான பயணிகள் காத்து கிடக்கின்றனர். காத்திருப்போரின் வரிசை நீண்டு கொண்டே போகிறது” எனவும் கூறினார்.

பல்வேறு விமான நிலையங்களில் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், கம்ப்யூட்டர்களின் தற்காலிக செயலிழப்பால் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த தொழில்நுட்ப சீர்குலைவுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சியாட்டில்-டகோமா சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகுதியில் கம்ப்யூட்டர்கள் பிரச்சினை சரியாகி விட்டதாக தெரிய வந்தது.

நியூயார்க் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையம், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் நிர்வாகங்கள் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், கம்ப்யூட்டர்கள் செயல்பாடு முடங்கிப்போய் விட்டதால் அதிகாரிகள் கைவேலையாக செய்வதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மாலை 4.20 மணியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பயணிகள் அவதியுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்ப்யூட்டர்கள் செயலிழப்பால் அமெரிக்க விமான நிலையங்களில் அவதியுற்ற பயணிகள், அந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

Next Story