வங்காளதேசத்தில் தீ விபத்து : 1,200 குடிசைகள் எரிந்து நாசம்


வங்காளதேசத்தில் தீ விபத்து :  1,200  குடிசைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:58 AM GMT (Updated: 18 Aug 2019 11:58 AM GMT)

வங்காள தேசம் டாக்கா அருகே உள்ள 1,200 குடிசைகள் எரிந்து நாசமானதால் 3,000 பேர் வீடுகளை இழந்து உள்ளனர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் வடக்கு புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிகிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்  1,200  குடிசைகள் எரிந்து  3,000 பேர் வீடுகளை இழந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும், மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட சட்டவிரோத எரிவாயு இணைப்புகளே இந்த தீ விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண மந்திரி  ரஹ்மான் கூறியதாவது :-

எங்கள் விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, 1,200 குடிசைகள் சேதமடைந்துள்ளன, இதில் 750 குடிசைகளில் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மொத்தம் 500 டன் அரிசி மற்றும் 1.3 மில்லியன் தக்கா ($ 15,476) வழங்கும் என்றும், தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து, சேதத்தின் அளவை மதிப்பிடுவதாகவும் ரஹ்மான் கூறினார்.

வங்காளதேசத்தில் தொழிற்சாலைகள், குடிசைபகுதிகள் மற்றும் சந்தைகளில் தீ விபத்து ஏற்படுவது பொதுவானது. இந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்காவில் 22 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story