சூடானில் ராணுவம்-பொதுமக்கள் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம்


சூடானில் ராணுவம்-பொதுமக்கள் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:30 PM GMT (Updated: 18 Aug 2019 8:02 PM GMT)

சூடானில் ராணுவம்-பொதுமக்கள் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கார்டூம்,

சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 3 ஆண்டு களுக்குள் ஜனநாயக முறையில் புதிய ஆட்சி பொறுப்பேற்பதற்கு வழிவகை செய்யப்படும் என ராணுவம் அறிவித்தது.

ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன. ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் பெரும் வன்முறை வெடித்தது. இது சர்வதேச கண்டனங்களுக்கு வழிவகுத்தது. இதையடுத்து ராணுவமும், பொதுமக்களும் இணைந்து ஆட்சியை வழிநடத்தவும், குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்த முடிவு செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இடைக்கால ராணுவ சபை மற்றும் பொதுமக்கள் தரப்பிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆகிய 2 அமைப்புகளும் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் தெற்கு சூடான் நாட்டின் அதிபர், எத்தியோப்பியா மற்றும் எகிப்து நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை சூடான் மக்கள் வரவேற்று ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பொதுமக்கள் தரப்பில் 6 பேர் மற்றும் 5 ராணுவ தளபதிகள் அடங்கிய ஒரு இறையாண்மை சபை, தேர்தல் வரை நாட்டை வழி நடத்தும். சபைத் தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் பரிந்துரைத்த ஒரு பிரதமர் அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளார்.


Next Story