இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் - பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்


இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் - பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:30 PM GMT (Updated: 18 Aug 2019 8:34 PM GMT)

இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் என்று பூடான் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார்.

திம்பு,

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக பூடான் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று அவர் தலைநகர் திம்புவில் உள்ள புகழ்பெற்ற ராயல் பூடான் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்தியாவும், பூடானும் ஒருவருக்கொருவர் பிணைப்புடன் இருப்பது ஆச்சரியம் இல்லை. இது, பூகோள அடிப்படையிலானது மட்டுமல்ல, நமது சரித்திரம், கலாசாரம், ஆன்மிக பாரம்பரியங்கள், இரு நாடுகளிடையே ஆழமான பிணைப்பை உருவாக்கி உள்ளன.

இளவரசராக இருந்த சித்தார்த்தர், கவுதம புத்தராக ஞானம் பெற்ற பூமியாக இருப்பதில் இந்தியா பெருமைப்படுகிறது. அங்கிருந்து அவரது ஆன்மிக ஒளி, உலகமெங்கும் பரவியது. புத்த பிட்சுகள், ஆன்மிக தலைவர்கள், அறிஞர் கள் ஆகியோர் அந்த ஒளியை பூடானில் பிரகாசமாக எரிய செய்தனர். அவர்கள் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே சிறப்பு பிணைப்பை உருவாக்கினர். நான் எனது ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகத்தில் புத்தரின் போதனைகளையே பெரும்பாலும் எழுதி உள்ளேன்.

உலகில் வேறு எந்த நாடுகளும் ஒருவரையொருவர் இந்த அளவுக்கு புரிந்து கொண்டும், பகிர்ந்து கொண்டும் இருந்தது இல்லை. இரு நாடுகளும் இயற்கையான நண்பர்கள்.

பூடான் நாட்டின் வருங்கால தலைவர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் முன்னால் நான் நிற்கிறேன். எதிர்கால சந்ததி மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அசாதாரண விஷயங்களை செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது.

பள்ளிகள் முதல் விண் வெளிவரை, மின்னணு பண பரிமாற்றம் முதல் பேரிடர் மேலாண்மைவரை உங்களுடன் ஒத்துழைக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. பூடான், சொந்தமாக செயற்கைகோள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பூடான், கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் 130 கோடி மக்களும் வெறுமனே உங்களை வேடிக்கை பார்க்கமாட்டார் கள். உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள், உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள், உங்களிடமிருந்து கற்றுக்கொள்வார்கள்.

மனித இனத்துக்கு பூடான் விடுக்கும் செய்தி, மகிழ்ச்சி ஆகும். மகிழ்ச்சியின் அடையாளமாக பூடான் கருதப்படுகிறது. இங்கு வரும்போது என்னை வரவேற்ற குழந்தைகளின் புன்னகை எப்போதும் நினைவில் இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில், பூடான் பிரதமர் லோடேய் ஷெரிங்கும் கலந்துகொண்டார்.

பூடான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.

பின்னர், மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், பூடான் அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Next Story