ஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை


ஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை
x
தினத்தந்தி 19 Aug 2019 7:23 AM GMT (Updated: 19 Aug 2019 7:23 AM GMT)

ஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை விதித்து உள்ளது.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக மத போதகர் ஜாகீர் நாயக் மலேசியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்த இண்டர்போல், எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர் நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 2017-ல் நிராகரித்து விட்டது.

ஜாகீர் நாயக் வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்க வேண்டியது உள்ளது என இந்திய அரசு, 2018-ல் அவரை நாடு கடத்த மலேசிய அரசுக்கு முறையான கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும் சாதகமான பதில் வரவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார் ஜாகீர் நாயக்.

இந்த நிலையில் மலேசிய அமைச்சரவை கூடி  இந்திய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கிற்கு நிரந்தர  குடியுரிமை வழங்குவது குறித்து  விவாதித்தது. இந்த கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள்,  பல இன தேசத்தில் இனரீதியான உணர்ச்சிகரமான கருத்துக்களை கூறியதற்காக அவரை வெளியேற்ற வேண்டும் என கூறினர்.

சமீபத்தில், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு "100 மடங்கு அதிக உரிமைகள்" இருப்பதாக அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது.

ஜாகீர் நாயக்கின் கருத்துக்கள் மலேசியாவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கலாம் என்று மலேசிய அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என  கூறப்பட்டது. மேலும் மலேசியாவின் சில மாநிலங்களில் அவர் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது  மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை விதித்து உள்ளது. 

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக் மலேசியாவின் மேலகா மாநிலத்தில் மத உரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலகா முதல்வர் அட்லி சஹாரி வெளியிட்டு உள்ள அறிக்கையில்,  “இதை நாங்கள் (நல்ல உறவுகளை) பராமரிக்க விரும்புகிறோம். எனவே ஜாகீர் நாயக்  இங்கு பேச அல்லது கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஜாகீர் நாயக்கை தடைசெய்த 7வது மலேசிய மாநிலம் மேலகா. முன்னதாக ஜோகூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சரவாக் மாநிலங்கள் ஜாகீர் நாயக்கை பிரசார கூட்டங்கள் நடத்த தடை விதித்து உள்ளன.

Next Story