ஹாங்காங் போராட்டம்: சீனாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை


ஹாங்காங் போராட்டம்: சீனாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2019 11:30 PM GMT (Updated: 19 Aug 2019 9:23 PM GMT)

ஹாங்காங் போராட்டத்தை தொடர்ந்து சீனாவுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவில் கடந்த 1989-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சீன பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது.

தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஜூன் மாதம் வரை நீடித்தது.

அப்போதைய சீன அரசு இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ஜூன் மாதம் 4-ந்தேதி தியானன்மென் சதுக்கத்தில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் குருவியை சுடுவது போல் போராட்டக்காரர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தினர். சீன ராணுவம் நிகழ்த்திய இந்த படுகொலையில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. தியானன்மென் சம்பவம் இன்றும் சீன மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.

இந்த சூழலில் ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் போராட்டம் தியானன்மென் படுகொலை போன்ற மீண்டும் ஒரு சம்பவத்துக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஹாங்காங் போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக கடந்த வாரம் சீனாவின் அரசு நாளிதழில் தியானன்மென் சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு “அதை மீண்டும் செய்யவைத்து விடாதீர்கள். சீனா அப்போது இருந்ததை விட பலமாகவும், முதிர்ச்சியுடனும் இருக்கிறது. சிக்கலான சூழ்நிலைகளை நிர்வகிக்கும் திறன் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது” என செய்தி வெளியிட்டது.

அத்துடன் ஹாங்காங்கின் எல்லை பகுதியில் சீனா ராணுவ படைகளை குவித்து வருகிறது. சீனாவின் இந்த போக்கு சர்வதேச அளவில் அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு போராட்டத்தை சீனா, தியானன்மென் படுகொலை பாணியில் ஒடுக்க முற்பட்டால் அது அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தீங்கு விளைவிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

நியூஜெர்சி மாகாணத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஹாங்காங் போராட்டத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

அவர்கள் (சீனா) வன்முறை செய்தால் அதை சமாளிப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். அதாவது, அது மற்றொரு தியானன்மென் படுகொலையாக மாறும். சீனா அதை செய்ய முற்பட்டால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை பாதிப்படையும்.

இந்த பிரச்சினைக்கான தீர்வுக்கு மனிதாபிமான ரீதியில் செயல்படுவதைக் காண நான் விரும்புகிறேன். அத்துடன் அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஓராண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story