இங்கிலாந்தில் இந்திய தூதரகம் முன் வன்முறை சம்பவம் : இங்கிலாந்து பிரதமர் வருத்தம்


இங்கிலாந்தில் இந்திய தூதரகம் முன் வன்முறை சம்பவம் : இங்கிலாந்து பிரதமர் வருத்தம்
x
தினத்தந்தி 21 Aug 2019 6:54 AM GMT (Updated: 21 Aug 2019 6:54 AM GMT)

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த அகஸ்டு 15ம் தேதியன்று இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு இங்கிலாந்தில் வாழும் பாகிஸ்தானியர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி வந்த அவர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக இந்திய தூதரகம் முன்பு கூடியிருந்த இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிய அளவில் கலவரம் மூண்டது. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய தூதரகம் முன்பு நடந்த வன்முறை சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலமாக ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story