காஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் - ஈரான் தலைவர்


காஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்  - ஈரான் தலைவர்
x
தினத்தந்தி 22 Aug 2019 6:26 AM GMT (Updated: 22 Aug 2019 6:26 AM GMT)

காஷ்மீர் மக்களுக்காக நியாயமான கொள்கையை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி உள்ளார்.

மத்திய அரசு  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள பிரான்சிடம் பாகிஸ்தான் புகார் கூறியது. 

இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுகப்போவதாக பாகிஸ்தான் கூறிய ஒரு நாள் கழித்து,  ஈரான் தலைவர்  அயதுல்லா சையத் அலி கமேனி கருத்து தெரிவித்து உள்ளார்.

ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா சையத் அலி கமேனி, காஷ்மீரில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து புதன்கிழமை கவலை தெரிவித்தார், 

அவர் கூறியதாவது :-

 காஷ்மீர் மக்களுக்காக  ஒரு நியாயமான கொள்கையை  முன்னெடுக்கும் என  இந்திய அரசை ஈரான் எதிர்பார்க்கிறது. காஷ்மீரில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இந்திய அரசாங்கம் காஷ்மீரின் உன்னத மக்களுக்கு ஒரு நியாயமான கொள்கையை பின்பற்றி இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

"காஷ்மீரில் தற்போதைய நிலைமை மற்றும் இது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்களுக்கு காரணம்,  இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, மோசமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவேயாகும். 

காஷ்மீரில் தொடர்ந்து மோதல் நடைபெற வேண்டும் என்று  பிரிட்டிஷ் வேண்டுமென்றே இந்த பிராந்தியத்தில் இந்த காயத்தை விட்டுவிட்டு சென்று உள்ளது என கூறினார்.

Next Story