பிரேசில் : அமேசானில் 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் காட்டுத்தீ


பிரேசில் : அமேசானில் 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் காட்டுத்தீ
x
தினத்தந்தி 22 Aug 2019 12:00 PM GMT (Updated: 22 Aug 2019 12:00 PM GMT)

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது.

பிரேசில், 

உலகில் உருவாகும் மொத்த ஆக்சிஜனில், 20% ஆக்சிஜன் பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகள் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. அதேபோல் உலகில் உள்ள 40%  விலங்குகளின் வசிப்பிடமாக இருக்கிறது. இதனால்தான் இந்த அமேசான் காட்டை ''பூமியின் இருதயம்'' என்று குறிப்பிடுகிறார்கள். இக்காடுகளில் உள்ள மரங்கள் பூமி வெப்பம் அடைவதை தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ அளவு, இந்த ஆண்டு கணக்கெடுப்பின் எண்ணிக்கையை எட்டியுள்ளது, பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி மையம் இதுவரை 72,843 காட்டித்தீகள் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90% காட்டுத்தீக்கள் இன்னும் அணையவில்லை என்றும் மேலும், நாளுக்கு நாள் புதிதாக காட்டுத் தீ ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயால் அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என்றும், அதேபோல் பல லட்சம் மரங்கள் எரிந்து சாம்பல் ஆகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை , பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மைய செயற்கைக்கோள் வெளிட்ட படங்களில்  புதிதாக 9,507  காட்டுத்தீக்களை கண்டறிந்துள்ளன. இந்த காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகைமூட்டத்தால், ரொரைமா நகரின் வடக்கு பகுதிகள் இருண்டு காணப்படுகிறது. மேலும்,  1, 370 சதுர மைல் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரேசில் நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறியதாவது :- 

”வரலாறு காணாத அளவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த காட்டுத்தீ ஏற்பட்டதற்கு தனியார் நிறுவனங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளே காரணம்” என அவர் கூறியுள்ளார்.

இப்பேரழிவால் பூமியின் இயற்கை சுழலில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வரலாற்றில் ஏற்பட்டுள்ள காடழித்தல் சம்பவங்களில் இதுவே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story