30 நாட்களுக்குள் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாது-பிரான்ஸ் அதிபர்


30 நாட்களுக்குள் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாது-பிரான்ஸ் அதிபர்
x
தினத்தந்தி 22 Aug 2019 12:58 PM GMT (Updated: 22 Aug 2019 12:58 PM GMT)

30 நாட்களுக்குள் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாது என பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார்.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தின்படி 2019 மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பிரெக்ஸிட்டை எதிர்த்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். 

உடனடியாக அவர் பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கினார். பிரெக்ஸிட்டுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு உடன் தெரசா மே ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். 

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறி இங்கிலாந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனாலும் பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் கடந்த ஜூன் 7-ந் தேதி பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

அதே வேளையில், பிரிட்டனில் உள்ள வடக்கு அயர்லாந்து மாகாணத்துக்கும், அயர்லாந்துக்கும் குடியரசுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்திற்கும் தீர்வு காண வேண்டிய நிலையில் இங்கிலாந்து உள்ளது.

இதையடுத்து, பெர்லின் நகரில்  ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெலை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின் போது,  ’அயர்லாந்து எல்லை பிரச்சினைக்கு தீர்வு கண்டு, 30 நாட்களுக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்படுத்தாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேற நேரிடும்’  என இங்கிலாந்து பிரதமரிடம் ஏஞ்ஜெலா மெர்கெல் கேட்டு கொண்டுள்ளார்.

இதையடுத்து, இன்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த போது  '30 நாட்களுக்குள் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உருவாக்கி செயல்படுத்துவது சாத்தியமில்லை’, என மேக்ரான் ஜான்சனிடம் கூறினார்.

இது குறித்து மேக்ரான் ஜான்சன் கூறுயதாவது :- 

’30 நாட்களுக்குள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது கடினம், அது தற்போதுள்ள ஒப்பந்தத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

Next Story