இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான்


இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான்
x
தினத்தந்தி 23 Aug 2019 3:18 AM GMT (Updated: 23 Aug 2019 3:18 AM GMT)

இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இஸ்லமாபாத்,

மத்திய அரசு  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.  இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தான் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த நிலையில், இம்ரான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-  “பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை” என்றார். 

Next Story