சிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி


சிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி
x
தினத்தந்தி 23 Aug 2019 7:08 AM GMT (Updated: 23 Aug 2019 8:02 AM GMT)

பாகிஸ்தான் மற்றும் சீனாவில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த கூட்டத்தில் சீனாவிலும், பாகிஸ்தானிலும் மத சுதந்திரம் ஒடுக்கப்படுவது குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து ஐ.நா. சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சிறுபான்மையினருக்கு எதிராக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்தன. குறிப்பாக சீனாவில் உய்கர் இன மக்களுக்கும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் எதிராக நடைபெறும் அநீதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த இரு நாடுகளும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளில் ஈடுபடுட்டு வருவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. இந்த விவாதத்தின் போது, சீனாவில் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் உய்கர் இன மக்களின் மத சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துவது மட்டுமல்லாது கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அவர்களுக்கு எதிராக நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடிப்படை உரிமையும், மத சுதந்திரமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் சார்பில் ஐ.நா. சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story