நாஸ்ட்ராடாமசின் தீர்க்க தரிசனங்கள்


நாஸ்ட்ராடாமசின் தீர்க்க தரிசனங்கள்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:45 PM GMT (Updated: 23 Aug 2019 12:01 PM GMT)

பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு மருத்துவர், மைக்கேல் நாஸ்ட்ராடாமஸ்.

தனது ‘நூற்றாண்டுகள்’ என்ற நூலில் வெளியிட்ட தீர்க்கதரிசனக் கருத்துகளுக்காகவே புகழ்பெற்றார் நாஸ்ட்ரா டாமஸ்.

தனது மறைவுக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து, ஏன், பல நூற்றாண்டுகள் கழித்து நடக்கப்போகும் நிகழ்வுகளை எல்லாம் தனது நூற்றாண்டுகள் நூலில் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு உலக நிகழ்வுகள் குறித்து நாஸ்ட்ராடாமஸ் தனது தீர்க்கதரிசனங்களை வெளியிட்டிருந்தாலும், அவர் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால், பிரான்ஸ் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்துத்தான் அதிகம் எழுதியிருக்கிறார்.

குறிப்பாக அந்நாட்டு வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான பிரெஞ்சுப் புரட்சி குறித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ராடாமஸ் தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த தகவலில் அவர், நார்பன், சால்ஸ் என்ற இரு முக்கிய நபர்கள், பதினாறாம் லூயி மன்னருக்குத் துரோகம் இழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

நார்பன் என்றழைக்கப்பட்ட கவுன்ட் நார்பன், பதினாறாம் லூயியின் ராணுவ மந்திரி ஆவார். அரியணையில் இருந்து தன்னைத் தூக்கி எறிய சதி செய்தவர்களுடன் இணைந்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரைப் பதவியில் இருந்து நீக்கினார், மன்னர்.

அதேபோல, வரேன்னஸ் நகரின் மேயராக இருந்தவர், சால்ஸ். அந்நகரில் வைத்துத்தான் லூயி மன்னரும், ராணி மேரி ஆன்டாய்னட்டும் கைது செய்யப்பட்டனர். அதற்கான பின்னணியில் இருந்தவர் சால்ஸ்தான் என்று கருதப்படுகிறது.

லூயி மன்னரின் முடிவைப் போல, மாவீரர் நெப்போலியனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்கூட நாஸ்ட்ராடாமஸ் கணித்தார்.

நாஸ்ட்ராடாமசின் தீர்க்கதரிசனங்களுக்காக அவரைப் புகழ்வோரைப் போல, அவர் கூறியதெல்லாம் தற்செயலாகத்தான் நடந்தன என்று விமர்சிப்பவர்களும் இருக் கிறார்கள்.

நாஸ்ட்ராடாமஸ் தனது தீர்க்கதரிசனங்களை நான்கு வரிப் பாடல்களாக, புதிர் வடிவில் எழுதியிருக்கிறார். அதுவும் குழப்பத்துக்குக் காரணம்.

நாஸ்ட்ராடாமசின் கணிப்புப்படி, 1999-ம் ஆண்டு ஏழாம் மாதம் இந்த உலகம் அழிந்துவிடும் என்று பலரும் கூறிக்கொண்டிருந்தார்கள்.

அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடவில்லை. பூமியும் நாமும் நலமாகத்தான் இருக்கிறோம். இதற்குரிய விளக்கத்தை, நாஸ்ட்ராடாமஸ்தான் நேரில் வந்து சொல்ல வேண்டும்!

Next Story