அபுதாபியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அமீரக அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது


அபுதாபியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அமீரக அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 24 Aug 2019 11:16 AM GMT (Updated: 24 Aug 2019 8:57 PM GMT)

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது வழங்கப்பட்டது.

அபுதாபி,

2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வழங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் 3-வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 4-வது இடத்திலும் உள்ளது. அமீரகத்தில் தமிழர்கள் உள்பட 30 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அந்தவகையில் உலகிலேயே அதிக அளவில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக அமீரகம் விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க அமீரகத்துடன் இந்தியா நீண்டகால நட்புறவை கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இது மேலும் நெருக்கமடைந்து வருகிறது. குறிப்பாக மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் அவர் 3 முறை அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

இப்படி இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க உறவுகளை மேம்படுத்தி வரும் பிரதமர் மோடியை கவுரவப்படுத்தும் வகையிலும், அவரது முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவருக்கு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஜாயித்’ விருது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் அமீரகம் போய் சேர்ந்தார். பிரான்சில் இருந்து நேரடியாக அமீரகம் சென்ற அவரை, அபுதாபி செயல்பாட்டு விவகார ஆணைய தலைவர் கல்தூன் கலீபா அல் முபாரக் வரவேற்றார்.

பின்னர் அபுதாபியில் உள்ள அதிபர் அரண்மனையில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் ஜாயித் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வழங்கினார். அமீரக நிறுவன தந்தை ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி மோடிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அங்கு இருந்த குறிப்பேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில், “எனக்கு வழங்கப்பட்ட ‘ஜாயித்’ விருது தனி நபருக்கு வழங்கப்பட்டது அல்ல. 130 கோடி இந்தியர்கள் வசிக்கும் ஒட்டு மொத்த தேசத்திற்கும் வழங்கப்பட்ட கவுரவம் ஆகும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்த விருதை வழங்கியமைக்காக அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தனது டுவிட்டர் தளத்திலும் மோடி கூறியிருந்தார்.

முன்னதாக பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையேயான வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘பட்டத்து இளவரசருடன் மிகச்சிறந்த முறையிலான ஒரு சந்திப்பு நடந்தது. நாங்கள் இருவரும் இந்தியா-அமீரகம் இடையே வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பட்டத்து இளவரசரின் தனிப்பட்ட உறுதிப்பாடு மிகவும் வலிமையாக உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் இது தொடர்பாக அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘இந்தியா-அமீரகம் இடையிலான உறவு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியாவில் முக்கிய துறைகளில் அமீரகம் செய்துள்ள முதலீடுகள் அதிகரித்து வருகிறது. 2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டுவதற்கு அமீரகத்தில் ஒரு மதிப்புமிக்க ஒரு கூட்டாளியை இந்தியா கண்டுபிடித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

இதைப்போல பிரதமர் மோடியின் அமீரக வருகைக்கு நன்றி தெரிவித்த பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், பிரதமர் மோடியை தனது சகோதரர் எனவும், அவர் (மோடி) தனது 2-வது வீட்டுக்கு வந்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். இரு தலைவர்களுக்கு இடையேயான உறவில் ஒரு புதிய சக்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அபுதாபியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அவற்றை முடித்துக்கொண்டு நேற்று மாலை 3.30 மணிக்கு தனி விமானம் மூலம் பஹ்ரைன் புறப்பட்டு சென்றார்.


Next Story