ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் - தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு


ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் - தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 9:11 PM GMT)

ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த சம்பவத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் முக்கிய கிரிமினல் வழக்குகளில் சிக்கி கைதாகிறவர்களை சீனாவுக்கு அனுப்பி வைத்து அங்கு விசாரணையை சந்திக்க வைக்க ஹாங்காங் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதுதொடர்பான மசோதாவை அங்குள்ள சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்ததைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து மசோதா கிடப்பில் போடப்பட்டது.

ஆனாலும் மசோதாவை நிரந்தரமாக திரும்பப்பெற வேண்டும், நிர்வாக தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ஆர்வலர்கள் வார இறுதி நாட்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று அங்குள்ள குன்டோங் பகுதியை நோக்கி பல்லாயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் திடமான தொப்பிகள், கண்ணீர்ப்புகையை எதிர்கொள்ள ஏற்ற முகமூடிகளை அணிந்து இருந்தனர். அவர்களை அங்கு குவிக்கப்பட்டிருந்த கலவர தடுப்பு போலீசார் தடுத்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்தனர். பாட்டில்களை வீசினர். தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்தனர்.

போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மிளகுத்தூள் வீசினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது.


Next Story