ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார் - டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை


ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார் - டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 26 Aug 2019 12:15 AM GMT (Updated: 25 Aug 2019 9:48 PM GMT)

பஹ்ரைன் பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார். அங்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பாரீஸ்,

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22-ந் தேதி புறப்பட்டார்.

இதில் பிரான்சில் முதற்கட்ட நிகழ்ச்சி களையும், அமீரக பயணத்தையும் முடித்த மோடி, நேற்று முன்தினம் பஹ்ரைன் போய் சேர்ந்தார். இந்த அரபு தேசத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

எனவே அவருக்கு பஹ்ரைன் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மனாமாவில் பஹ்ரைன் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹாமத் பின் இசா அல் கலிபாவை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள், குறிப்பாக வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதைப்போல பஹ்ரைன் மன்னர் ஹாமத் பின் இசா அல் கலிபாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பஹ்ரைனின் உயரிய விருதான மறுமலர்ச்சி விருது மோடிக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்தியா-பஹ்ரைன் இடையிலான கலாசார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

பின்னர் பஹ்ரைன் தேசிய மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய பிரதமர் ஒருவர் பஹ்ரைனுக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. இந்த சிறிய அரபு ராஜ்ஜியத்துக்கு வரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

பஹ்ரைன் தலைவர்களுடன் நான் பேசிக்கொண்டு இருந்த போது, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் சிறப்பான பங்களிப்பை செய்து வருவதாக அவர்கள் உங்களை பாராட்டினர். எப்போதெல்லாம் இந்திய மக்களை அதாவது இங்கு வசிக்கும் இந்திய தொழிலதிபர்களை, இங்கு குடியிருக்கும் உங்களை பிறர் புகழ்வதை கேட்டாலும், மகிழ்ச்சியால் எனது நெஞ்சம் நிறைகிறது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் துடிப்பான பங்களிப்பால் இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமது லட்சியங்கள் உயர்ந்தது. வருகிற 5 ஆண்டுகளுக்குள் நமது பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த வேண்டும்.

தங்கள் கனவு நனவாகும் என, நம்பிக்கைகள், ஆசைகள் நிறைவேறும் என இந்தியர்கள் ஒவ்வொருவரும் தற்போது நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளின் வலிமையில் நான் புதிய முடிவுகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறேன். வேற்றுமை மற்றும் வண்ணங்கள் நிறைந்த இந்தியாதான் நமது வலிமை. இதுதான் உலகை கவர்வதுடன், பிரமிக்கவும் செய்கிறது.

சந்திரயான்-2 விண்கலம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. அந்தவகையில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவின் விண்வெளி திட்டங்களை பற்றி தான் இன்று பேசிக்கொண்டு இருக்கின்றன. சிறிய பட்ஜெட்டில் எப்படி நாம் இத்தகைய பெரிய சாதனைகளை படைக்கிறோம்? என உலகம் பிரமிக்கிறது. இவற்றுக்கு நமது திறமையே காரணம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோவிலுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு 4.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.30 கோடி) மதிப்பில் மேற்கொள்ள இருக்கும் புனரமைப்பு பணிகளை அவர் தொடங்கிவைத்தார். அப்போது அங்கு வந்திருந்த ஏராளமான இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்த படங்களை பின்னர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பகிர்ந்திருந்த மோடி, அதுபற்றி கூறுகையில், ‘பஹ்ரைனின் கிருஷ்ணர் கோவிலில் ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள் இவை. இந்த பிராந்தியத்தின் பழமையான கோவில்களில் ஒன்றான இது, இந்தியா-பஹ்ரைன் இடையேயான வலிமையான உறவுகளை வெளிப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து, பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 250 இந்திய கைதிகளை விடுவிப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பஹ்ரைன் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக பிரதமரின் அலுவலகம் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளது.

பஹ்ரைனில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று மீண்டும் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் ‘ஜி-7’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். குறிப்பாக சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பான அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றபோதும், அந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். காஷ்மீர் பிரச்சினை குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

மேலும் இங்கிலாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.


Next Story