அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி 7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல் - மேக்ரான்


அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால்  பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி 7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல் - மேக்ரான்
x
தினத்தந்தி 26 Aug 2019 6:11 AM GMT (Updated: 26 Aug 2019 6:11 AM GMT)

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு முடிந்தவரை விரைவாக உதவுவதற்கு ஜி 7 நாட்டு தலைவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார்.

பாரீஸ்,

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன.

சர்வதேச  அழுத்தத்தை தொடர்ந்து பிரேசில் அதிபர் போல்சனாரோ காட்டுத் தீயை கட்டுப்படுத்த  இராணுவத்தை ஈடுபடுத்த உத்தரவிட்டார்.



இந்த முயற்சியில்  44,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதுடன், ஏழு மாநிலங்களில்  தீயை அணைக்க ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதற்கு போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் நிறுவனத்திடம் இருந்து போயிங் 747 ரகத்தை சேர்ந்த விமானத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாக பொலிவியா அதிபர் எவோ மாரல்ஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.



அதன்படி அந்த நிறுவன தலைவர் டேன் ரீசி தலைமையிலான 14 பேர் அடங்கிய குழுவினர் பொலிவியா வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூப்பர் டேங்கர் விமானம் ஒரே தடவையில் சுமார் 71 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கீழே கொட்டும் வல்லமை கொண்டது.

பிரேசிலில் எரியும் காட்டுத்தீ  சர்வதேச அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமேசான்  காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க  பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்  "தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி" வழங்கும் ஒப்பந்தம் போட  இருப்பதாகக் கூறினார்.

அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் கனடாவை சேர்ந்த தலைவர்கள், கடலோர நகரமான பியாரிட்ஸில் திங்கள்கிழமை சந்தித்து பேசினர்.



பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்,  அமேசான் காட்டுத்தீ  ஒரு "சர்வதேச நெருக்கடி" என்று விவரித்தார். மேலும் இந்த வார இறுதியில் ஜி 7 உச்சி மாநாட்டில் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



இம்மானுவேல்  மேக்ரான் நேற்று கூறும் போது, "தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு முடிந்தவரை விரைவாக உதவுவதற்கு தலைவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எங்கள் அணி நாடுகள் அனைத்தும் அமேசான் நாடுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன. இதன் மூலம் தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நிதியுதவி சம்பந்தப்பட்ட சில உறுதியான நடவடிக்கைகளை  நாங்கள் இறுதி செய்ய முடியும்" என கூறினார். 

மழைக்காடுகளைப் பாதுகாக்க பிரிட்டன் 10 மில்லியன் டாலர் வழங்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

Next Story