ஈரானிய வெளியுறவு மந்திரியை சந்திக்க விரும்பவில்லை - டிரம்ப்


ஈரானிய வெளியுறவு மந்திரியை சந்திக்க விரும்பவில்லை - டிரம்ப்
x
தினத்தந்தி 26 Aug 2019 9:54 AM GMT (Updated: 26 Aug 2019 9:54 AM GMT)

பிரான்சில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில், ஈரானிய வெளியுறவு மந்திரியை சந்திக்க விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பாரீஸ், 

வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது. இது ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது எண்ணமாகும். எனவே, கடந்த ஆண்டு திடீரென ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. வரலாற்றில் இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன. மேலும், ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

இந்நிலையில், பிரான்சில் இன்று நடந்த ஜி-7  உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது : -

நான் வலிமையான ஈரானை பார்க்க விரும்புகிறேன், ஆனால், ஈரானில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத்  ஜரீப்பை, பிரான்ஸ் அழைத்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவரை சந்திக்க நான் விரும்பவில்லை என்றார். மேலும், ஈரான் பொருளாதார ரீதியாக மீண்டும் முன்னுக்கு வர வேண்டும்,  அணு ஆயுதம் இல்லாத நாடாக இருக்க வேண்டும், தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story