அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து பெண் எம்.பி. விலகல்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து பெண் எம்.பி. விலகல்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 11:00 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து பெண் எம்.பி. விலகினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அக்கட்சியை சேர்ந்த 5 பெண் எம்.பி.க்கள் டிரம்புக்கு எதிராக போட்டியிடுவதற்கான வாய்ப்பை தேடி களம் இறங்கினர்.

அவர்களில் முக்கியமானவர் நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட். இதற்காக அவர் கடந்த 8 மாதங்களாக ஜனநாயக கட்சியினரிடையே தீவிர பிரசாரம் செய்து வந்தார். மேலும் ஜனநாயக கட்சியின் சக போட்டியாளருடனான முதல் சுற்று விவாதத்தில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆனால் அண்மையில் நடந்த 2-வது சுற்று விவாதத்தில் எதிர்பாராதவிதமாக வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, அவர் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

இன்று, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டிக்கான எனது பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன். நாங்கள் சாதித்த அனைத்தையும் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எங்களது ஆதரவாளர்களுக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறோன். நாம் (ஜனநாயக கட்சி) டிரம்பை தோற்கடித்து, நாடாளுமன்றத்தை வெல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story