லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 403 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்


லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 403 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:03 AM GMT (Updated: 30 Aug 2019 4:03 AM GMT)

லிபியாவின் கோம்ஸ் நகர கடற்கரையிலிருந்து சுமார் 403 அகதிகள் லிபிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

திரிபோலி, 

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011-ம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்து, கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, கடத்தி கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது. இதனால் அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டது. இதனால் லிபியாவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், லிபியா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கிவரும் போட்டி அரசு, உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. போட்டி அரசின் லிபியா தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.

இதுவரை நடந்த சண்டையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், 5,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மேலும் 120,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பின்மை மற்றும் அரசியலில் நிலையற்ற தன்மை காரணமாக, ஐரோப்பாவிற்கு புலம்பெயர முயற்சிக்கும் அந்நாட்டு குடிமக்கள் உயிரை பணயம் வைத்து மிதந்தியதரின் கடலை கடக்க முயற்சிக்கின்றனர்.

அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கோம்ஸ் நகரத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 403 அகதிகள் லிபிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சர்வதேச  இடம்பெயர்வுக்கான அமைப்பின் அறிக்கையின் படி 2019-ஆம் ஆண்டில் 16,630 பேர் வெளிநாடுகளுக்கும், 22,366 பேர் உள்நாட்டிலேயே பாதுக்காப்பான இடங்களுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர். 426 பேர் கடல் வழி மூலம் புலம்பெயரும் முயற்சியில் பலியாகியுள்ளனர்.


Next Story