ஸ்பெயினில் காளை விரட்டு திருவிழா: வேடிக்கை பார்த்த முதியவர் காளை முட்டி பலி


ஸ்பெயினில் காளை விரட்டு திருவிழா: வேடிக்கை பார்த்த முதியவர் காளை முட்டி பலி
x
தினத்தந்தி 30 Aug 2019 10:39 PM GMT (Updated: 30 Aug 2019 10:39 PM GMT)

ஸ்பெயினில் காளை விரட்டு திருவிழாவில், வேடிக்கை பார்த்த முதியவர் ஒருவர் காளை முட்டியதில் பரிதாபமாக பலியானார்.

மாட்ரிட்,

ஸ்பெயினில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாரம்பரிய ‘காளை விரட்டு’ திருவிழா களைகட்டும்.

நவார்ரே பிராந்தியத்தின் தலைநகர் பாம்ப்லோனாவில் உள்ள குறுகிய வீதிகளில் காளைகளை ஓடவிட்டு, வீரர்கள் விரட்டி சென்று பிடிப்பார்கள். வீதிகளின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆரவாரம் செய்து இதனை கண்டு ரசிப்பார்கள்.

இந்த திருவிழாவின் போது, ஒவ்வொரு ஆண்டும் காளைகள் முட்டி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழப்பதோ அல்லது காயம் அடைவதோ வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ‘காளை விரட்டு’ திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி, நடந்து வருகிறது. அங்குள்ள குல்லர் நகரில் நேற்று முன்தினம் காளைகள் ஓடவிடப்பட்டன.

வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை வீரர்கள் பிடிக்க முயன்றனர். இதை காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது, ஆக்ரோஷமாக ஓடி வந்த காளை ஒன்று பார்வையாளர்களை நோக்கி பாய்ந்தது.

இதனால் பதறிப்போன பார்வையாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் காளை, 62 வயதான முதியவர் ஒருவரை விரட்டி சென்று கூர்மையான கொம்புகளை கொண்டு முட்டி தூக்கி வீசியது.

இதில் முதியவரின் கழுத்து, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


Next Story