இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ மசோதா தோல்வி - முன் கூட்டியே தேர்தல் வருமா?


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ மசோதா தோல்வி - முன் கூட்டியே தேர்தல் வருமா?
x
தினத்தந்தி 4 Sep 2019 10:44 PM GMT (Updated: 4 Sep 2019 11:18 PM GMT)

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ மசோதா தோல்வியடைந்துள்ளதால், முன் கூட்டியே தேர்தல் வருமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த ‘பிரெக்ஸிட்’ மசோதா தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு செய்தது. ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படும் இந்த நடவடிக்கைக்காக ஏற்கனவே பிரதமராக இருந்த தெரசா மே, நாடாளுமன்றத்தில் வரைவு ஒப்பந்தம் ஒன்றை தாக்கல் செய்து எம்.பி.க்களின் ஒப்புதலை பெற முயன்றார்.

ஆனால் பலமுறை ஓட்டெடுப்பு நடத்தியும் மசோதா நிறைவேறாததால் தெரசா மே கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

‘பிரெக்ஸிட்’டுக்கான காலக்கெடு அடுத்த மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள்ளாக ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பான மசோதா ஒன்றை பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் மசோதாவுக்கு ஆதரவாக 301 ஓட்டுகளும், எதிராக 328 ஓட்டுகளும் பதிவாகின. முன்னாள் மந்திரிகள் உள்பட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் மசோதாவை தோற்கடித்துள்ளனர்.

கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த அதிருப்தி எம்.பி.க்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்கள் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பிரெக்ஸிட்’ தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் மசோதாவே தோல்வியை தழுவியதால் இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’டுக்கான காலக்கெடுவை அக்டோபர் 31-ந்தேதிக்கு பிறகும் நீட்டிக்கக் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இங்கிலாந்தில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த வேண்டியிருக்க வேண்டும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஒரு தேர்தலை விரும்பவில்லை, ஆனால் பேச்சுவார்த்தைகளை நிறுத்தவும், மற்றொரு அர்த்தமற்ற ‘பிரெக்ஸிட்’ தாமதத்தை கட்டாயப்படுத்தவும் எம்.பி.க்கள் நினைத்தால், தேர்தல் மட்டுமே ஒரே தீர்வு” என கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.


Next Story