இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கோரிய தீர்மானம் தோல்வி


இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கோரிய தீர்மானம் தோல்வி
x
தினத்தந்தி 5 Sep 2019 11:45 PM GMT (Updated: 5 Sep 2019 6:55 PM GMT)

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கோரிய தீர்மானம் தோல்வியை தழுவியது. இது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தொடர் பின்னடைவாக அமைந்துள்ளது.

லண்டன், 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறியதால் பிரதமர் தெரசா மே பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஒப்பந்தம் இன்றியே ‘பிரெக்ஸிட்’ நிகழும் என திட்டவட்டமாக கூறினார்.

அப்படி ஒப்பந்தம் இன்றி வெளியேறும்பட்சத்தில், பொருளாதார ரீதியாக இங்கிலாந்து பெரும் சரிவினைச் சந்திக்கும். எல்லைப் பாதுகாப்பு, குடியுரிமை, வர்த்தகம், போக்குவரத்து, உணவு கொள்முதல் எனப் பல்வேறு விஷயங்களில் இங்கிலாந்து சிக்கல்களை சந்திக்கும்.

எனவே ஒப்பந்தம் இன்றி ‘பிரெக்ஸிட்’ நிறைவேற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு நிலவிய சூழலில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக போரிஸ் ஜான்சன் அரசு தாக்கல் செய்த முதல் மசோதாவை இங்கிலாந்து எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

முன்னதாக போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பிலிப் லீ என்ற எம்.பி., கட்சியில் இருந்து விலகியதால் நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.

மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் அரசு தரப்பு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

பிரதமரான பிறகு பிரெக்ஸிட் விவகாரத்தில் தன்னுடைய முதல் தோல்வியைச் சந்தித்திருக்கும் போரிஸ் ஜான்சன், தன்னுடைய எண்ணம் நிறைவேற, இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்று முழங்கினார்.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தம் இன்றி வெளியேறுவதற்கு தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனால் ஏற்கனவே பல ஆண்டுகளாகத் தள்ளிப்போகும் ‘பிரெக்ஸிட்’ மீண்டும் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்படும்.

இதன் மூலம் ஒப்பந்தம் இன்றி ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்றும் போரிஸ் ஜான்சனின் எண்ணம் பொய்த்தது. எனவே இங்கிலாந்து பொதுத்தேர்தலை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அவர் முன்மொழிந்தார்.

உடனடியாக அந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு எதிராக 298 ஓட்டுகளும், ஆதரவாக 56 ஓட்டுகளும் பதிவாகின.

இதனால் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தி அக்டோபர் 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்றிவிடலாம் என்கிற போரிஸ் ஜான்சனின் திட்டம் கேள்விக்குறியாகி விட்டது.

அத்துடன் ஒப்பந்தமில்லா ‘பிரெக்ஸிட்’டுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தடைவிதித்துவிட்டதால் ‘பிரெக்ஸிட்’டுக்கான காலக்கெடுவை நீடிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு போரிஸ் ஜான்சன் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் காண வாய்ப்பிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story